ஞாயிறு, 29 நவம்பர், 2009

விதியும் [Fate], வினையும் [Action], விளைவும் [Consequence]!!!


விதி என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு என்றால் என்ன? விளைந்தது...

விதிக்கப்பட்டதால் செயலாக்கப்பட்டு விளைந்ததா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள் என்று ஒரே மூளைப்புயல் நேரம் [Brain-Storming Session?? :)] எனக்குள்.

விதி யாரால் உருவாக்கப்பட்டது? கடவுள் அல்லது நம்மை இயக்கும் யாரோ ஒருவர். நாம் அறிவியல் முறைப்படி இதை கேள்விக்கு உள்ளாக்குவோம். அப்போதுதானே விடை கிடைக்கும்.

நமது சூரிய குடும்பம் மட்டுமல்லாது அண்டம், பெருவெளி எல்லாமே ஒரு காந்த மண்டலம். ஒன்றன்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் உள்ளன. ஒரு காந்த மண்டலத்தில் உள்ளே இருக்கும் அனைத்தும் காந்தமாக மாறிவிடுகின்றன என்பதே அறிவியல் உண்மை. எனவே உள்ளே இருக்கும் சூரியன், நமது பூமி அனைத்துமே காந்தம்தான்... நாமும்தான். அனைத்து காந்தங்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து அந்தரத்தில் இருக்கின்றன மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன.

இப்போது நாமும் காந்தம்தானே. அப்போது நமக்கும் ஈர்ப்பு சக்தி இருக்கும்தானே. ஒருவரை ஒருவர் ஈர்த்தல். மயிர்கூச்செறிதல், புல்லரித்தல் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இதற்கு காரணம் மின் காந்த அலைகள். [ஆதாரம்: http://homeschooling.about.com/library/blsciact11.htm]

இப்போது நாம் சிந்திப்போம்... நாம் காந்த மண்டலத்தில் இருப்பது விதிக்கப்பட்டது. நாம் செய்யும் செயல்பாடுகள் வினைகள். அதனால் விளைவது விளைவுகள். மின் காந்த அலைகளினால்தான் நமது இயக்கம் சீராக இருக்கிறது என்றால்... விதியினால்தான் வினைகள் உருவாகின்றன என்று நாம் பொருள் கொள்ளலாமா?... எனவே நமது செயல்பாடுகள் ஒன்றை ஒன்று தொடர்புடையதாகிறது. நியூட்டனின் 3ஆம் விதி என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது. சரிதானே.

விதியை மதியால் வெல்லலாமா? நாளையும் எழுதிகிறேன்... சிறிது யோசிக்க வேண்டாமா அன்பர்களே...
மேலும் படிக்க......

வெள்ளி, 27 நவம்பர், 2009

பஞ்ச பூதங்களும் [Five Elements] நமது உடம்பும் [Human Body]...


நாம் நம் உடம்பை பற்றி என்ன அறிந்திருக்கிறோம்? அவை பஞ்ச பூதங்களுக்குள் அடக்கம் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம். என்றைக்காவது நம் உடம்பில் அவை என்ன என்ன என்று யோசித்திருக்கிறோமா? இதோ அவைகளின் பட்டியல்...

மண்ணின் பகுதி

நரம்பு, இறைச்சி, என்பு, மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.

நீரின் பகுதி

நீர், முளை, சுக்கிலம், நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.

தீயின் பகுதி

பசி, சோம்பல், மைதுனம், காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி

காற்றின் பகுதி

போக்கு, வரவு, நோய், கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.

ஆகாயத்தின் பகுதி

வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.

வாயு

உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.

நாடி

வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குகு, கன்னி, அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முடிவுரை

இதில் வாயு மற்றும் நாடி ஆகியவை இன்னும் அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. மற்றவைகளையும் கூடிய சீக்கிரம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம் தமிழ் உள்ளங்கள் நினைத்து ஏமாந்து போக வேண்டாம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்... எப்பொழுது? ஏதேனும் ஒரு தமிழன் அல்லது நமது அடுத்த தலைமுறை தமிழனோ தமிழச்சியோ இதை ஒரு அறிவியல் பாடமாக எடுத்து விளக்கங்களோடு நிருபித்தாலொழிய இதை நம்மால் அடுத்தவர்களை ஒப்புக்கொள்ளவைக்க முடியாது.
மேலும் படிக்க......

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை அல்லது எஸ்.எஸ்.பிள்ளை [S.S.Pillai]


நாம் கொண்டாட வேண்டிய தமிழ் கணிதவியலாலர்களில் ஒருவர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை அல்லது எஸ்.எஸ்.பிள்ளை [S.S.Pillai].

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார். அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார். செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார். இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார். இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்விச் சலுகை பெற்று நன்றாகவே படித்து B.A. பட்டம் பெற்றார்.

மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1927 இல் ஆனந்தராவின்கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு D.Sc. பட்டமே வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் D.Sc. இவர்தான்.

சாதனைகள்:

76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.

1) வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு

எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார்.

ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்: ஒவ்வொரு நேர்ம முழு எண் k க்கும் g(k) என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்:

எந்த நேர்ம முழு எண்ணையும் g(k) எண்ணிக்கை கொண்ட k - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை g(k)யாகும்.

எடுத்துக்காட்டாக, g(2) = 4. அதாவது, எந்த எண்ணையும் நான்கு எண்ணிக்கைக்கு அதிகமில்லாத எண்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகையாகக் காட்டலாம். குறிப்பாக

27 = 16 + 9 + 1 + 1
32 = 16 + 16
77 = 36 + 36 + 4 + 1
200 = 100 + 64 + 36

1770 இலேயே (லாக்ரான்சி) g(2) = 4 என்பது தெரியும். 1910 இலிருந்து g(3) = 9 என்பதும் தெரியும்.
பிள்ளையின் கண்டுபிடிப்பு: (1936). 7 அல்லது 7 க்கு மேலுள்ள எல்லா k க்கும், g(k) = 2k + l − 2; இங்கு, l என்பது (3 / 2)kஐ விட பெரியதல்லாத மீப்பெரு முழு எண். k = 6 என்ற பட்சத்திலும் 1940 இல் இன்னும் கடினமான ஒரு முறையில் g(6) = 73 என்றும் கணித்தார்.

பிள்ளை பகா எண்கள்:

அவர் கண்டுபிடித்த ஒருவித பகா எண்களுக்கு பிள்ளை பகா எண்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. பகாஎண் p கீழ்வரும் பண்பை உடையதாக இருந்தால் அது பிள்ளை பகா எண் எனப்படும்:

ஒரு நேர்ம முழு எண் இருக்கவேண்டும். அது சரி செய்ய வேண்டிய சமன்பாடுகள்:

(*) n! = − 1modp


இதன் பொருள்: n!, pஇன் ஏதோ ஒரு மடங்கை விட ஒன்று குறைவு. மற்றும், p − 1, nஇன் எந்த மடங்காவும் இருக்காது.

எடுத்துக்காட்டாக, 79 ஒரு பிள்ளை பகா எண். ஏனென்றால்,
23! + 1, 79 ஆல் சரியாக வகுபடுகிறது. மற்றும், 78, 23இன் எந்த மடங்கும் இல்லை. ஆக, 79 க்குகந்ததாக 23 என்ற் n உள்ளது.

முதல் 39 பிள்ளை பகா எண்கள்:

23,29,59,61,67,71,79,83,109,137,139,149,193,227,233,239,251,257,269,271,277,293,307,311,317,359,379,383,389,397,401,419,431,449,461,463,467,479,499

இத்தொடர் முடிவில்லாதது என்று எர்டாஷ், சுப்பராவ், ஹார்டி முதலியவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க......

செவ்வாய், 24 நவம்பர், 2009

கே. ஆனந்த ராவ் [K.Ananda Rau] - ஒருங்காத சரங்கள் [Divergent Series]இன்று நாம் யாரை கொண்டாடுகிறோம்? யார் நம்மால் நாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்? இதற்கான விடை நாமனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் கொண்டாடவேண்டியது நம் தமிழ் அறிவியலாளர்களை. ஆகையால் நானும் அவ்வப்பொழுது எனக்கு கிடைக்கும் விடயங்களை இந்த இடுகையில் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

பிறப்பும், கல்வியும், சாதனைகளும்

சென்னையில் 1893 இல் பிறந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். 1914 இல் கேம்பிரிட்ஜ் சென்று ஜீ. ஹெச். ஹார்டியின் மாணவராகச் சேர்ந்தார். உயர்ந்த பரிசான ஸ்மித் பரிசைத் தட்டிக்கொண்டார். அங்கு முனைவர் பட்டம் பெற்றபிறகு 1919 இல் சென்னை திரும்பினார்.

1) ஹார்டியின் 'ஒருங்காத சரங்கள்' (Divergent series) என்ற நூலில், ஆனந்தராவ் தேற்றம் [Ananda Rau Theorem] என்று பெயர் சூட்டப்பட்ட தேற்றமுள்ளது
2) பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன

நமது குழந்தைகளுக்கு
இதை படிக்கும் குழந்தைகள் அல்லது படிப்பவர்கள் தங்களது குழந்தைகளின் மனதில் அவர்களின் ஆதர்ஷ புருஷர்களாக வரிக்க கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் நமக்கு இவர்களை போல முத்துக்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க......

சனி, 21 நவம்பர், 2009

கடவுள் [God] மற்றும் கருந்துளை [Black Hole]!!!


இன்று அறிவியல் கூற்றுப்படியும் சித்தாந்த கூற்றுப்படியும் கடவுள் என்பதற்கு தெளிவான விளக்கங்கள் இல்லை அல்லது தெரியவில்லை அல்லது புரியவில்லை.

இதே போல் கருந்துளைக்கும் [Black Hole] விளக்கங்கள் இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானிருக்கிறது. இது வரையில் முன்னேற்றம் இல்லை.

சிலர் கூறுகிறார்கள். கருந்துளைக்குள்ளே சென்று பார்த்தோமென்றால் வேறொரு உலகம் இருக்கலாம். மேலும் அதன் உள்ளே செல்லும் தகவல்கள் அழிவதில்லை என்று புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்க் [Stephen Hawking] கூறுகிறார். [ஆ. http://physicsworld.com/cws/article/news/34239]. ஆனால் இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை.

எனக்கு ஒரு சிந்தனை. எப்படி அதனுள்ளே சென்று விட்டு வெளியே வருவது. அப்படி ஒருக்கால் உள்ளே கடவுள் இருந்தாரென்றால் அவரிடம் என்ன கேட்பது என்று?

அப்படியென்றால் எனக்கு ஒரு வாகனம் வேண்டும். அது கருந்துளையின் ஈர்ப்பு விசையை காட்டிலும் வேகமாக செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அதை எப்படி கண்டு பிடிப்பது? கருந்துளையின் புவி ஈர்ப்பு விசை என்னவென்று தெரிந்தால்தானே என்னால் அதற்கேற்றாற்போல் வாகனம் தயாரிக்க முடியும்.

பழைய தமிழ் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு விடயம் பளிச்சென்று என் மனதில் தங்கியது. அது என்னவென்றால்,

சூரிய சித்தாந்தப்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் எனப்படும் நான்கு யுகங்களைக்கொண்டது ஒரு சதுர்யுகம்.

1 சதுர்யுகம் - 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகங்கள் - 1 மன்வந்தரம்
14 மன்வந்தரங்கள் - 1 கல்பம்
1 கல்பம் - 1/2 நாள் [நமக்கல்ல அன்பர்களே, படைப்பு கடவுள் பிரம்மாவுக்கு]

இப்போது நாம் இந்த இரண்டு விடயங்களை வைத்து சிறிது யோசிப்போமே. கருந்துளைக்கு பின்னால் கடவுள் இருக்கிறாரென்று வைத்து கொள்வோம். இப்போது கடவுளை அடைவதற்கு வாகனம் தயாரிக்க வேண்டும் மற்றும் அதன் வேகம் எப்படி இருக்க வேண்டும்.

உலகத்தில் தற்போது சூப்பர்சோனிக் [Supersonic] வாகனங்கள்தான் வேகமானது. இது ஒலியின் [Sound] வேகத்திற்கு ஈடாக செல்லும். அதாவது வினாடிக்கு 340.29 மீட்டர். இதற்கும் மேலே ஒளியின் [Light] வேகம் உள்ளது. அது என்னவென்றால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர் அல்லது 2,99,792.458 கிலோமீட்டர் .

நம் அனைவருக்கும் தெரியும் ஒளியின் வேகம் கூட கருந்துளையின் உள்ளே செல்லும் ஆனால் வெளியே வராது. ஆகவே நாம் அதையும் மீறிச்செல்லும் ஒரு வாகனத்தை தயாரித்தால் ஒழிய நம்மால் கருந்துளைக்கு உள்ளே சென்று வெளியே வர முடியாது என்பதே திண்ணம்.

இப்போது நமது வாகனத்தின் வேகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது பிரம்மாவுக்கு 1 கல்பம் 1/2 நாள் [அதாவது அவர் இந்த வேகத்தில் முன் சென்று கொண்டிருக்கிறார் என்று எடுத்துகொள்வோம்.] என்றால் நாம் அதை விட வேகமாக செல்லும் ஒரு வாகனத்தை கண்டு பிடிக்கவேண்டும். இதை கணித ரீதியாக பார்க்கலாமே.

1) ஒரு ஒளி வருடம் என்பது 94,60,73,04,72,580.8 கிலோமீட்டர்
2) பிரம்மாவின் 1/2 நாள் என்பது 1 கல்பம். ஆண்டுகளில் இதை மாற்றினோமென்றால் மொத்தம் 4,29,40,80,000 ஆண்டுகள். இதை ஒரு வினாடிக்கு மாற்றினோமென்றால் 18,55,04,25,60,00,000 வினாடிகள். அதாவது ஒரு வினாடிக்கு பிரம்மாவுக்கு இவ்வளவு வேகத்தில் வயதாகிறது.
3) ஒரு ஒளி வருடத்தை ஒளியின் வேகத்தில் சென்றால் 3,15,57,600 வினாடிகளில் [36,458 நாள்கள் அல்லது 99.81861366078701 வருடங்கள்] சென்றடையலாம்
4) இப்போது நாம் பிரம்மாவின் வேகத்தை [அதாவது 18,55,04,25,60,00,000 வினாடிகள்] ஒளி வருடமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றினால் 19.60781... ஒளி வருடங்கள் வருகிறது.

சுருங்கச்சொல்வதானால் இந்த தொலைவை நாம் அரை நாளில் கடந்தோமேன்றால் பிரம்மாவை அவரது வேகத்தில் கூடவே சென்று பார்த்து வரலாம். மேலும் இந்த கட்டுரையின் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் பிரம்மாவை பார்க்கிறோமோ இல்லையோ கருந்துளையின் உள்ளே என்ன இருக்கிறது என்றாவது பார்த்து விட்டு வரலாம் என்பதே.

இதை கேட்டு விட்டு என் நண்பன் சிரித்தான். என்னவென்று கேட்டேன்? அவன் இந்த வண்டி தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்றான்? நான் தெரியவில்லை என்றேன்? அவன் மேலும் சிரித்து விட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு வண்டி தயாரித்து அதில் ஏறி நீ பிரம்மாவை பார்ப்பதற்கு நம்ம ஊர் பஸ் ஒன்றின் அடியில் போய் விழு, கடவுளிடம் உடனே போய் சேருவாய் என்று கூறி கட கடவென்று சிரித்தான்.

என்ன சொல்வது? நம்ம ஊரில் அறிவுக்கு மதிப்பில்லையே? இருந்தாலும் அவனின் நேரத்திற்கேற்றாற்போல் நகைப்பை ஏற்படுத்தும் பேச்சை ரசித்தேன்.

எனது இந்த கணக்குகளில் ஏதேனும் தப்பிருக்கலாம். ஆனால் எனது சிந்தனையில் பிழையிருப்பதாக நான் நினைக்கவில்லை. அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
மேலும் படிக்க......

புதன், 18 நவம்பர், 2009

சோதிடக்கலையும் [Jothidam] வானவியலும் [Astronomy] ஒன்றா? II


தமிழும் சோதிடக்கலையும் பிரிக்க இயலாதது. ஏனெனில் இக்கலையை நமக்கு உருவாக்கியவர் குறுமுனி அகத்தியர்தாம். இவரேயாம் தமிழையும் உருவாக்கியதாக பதிவாகியுள்ளது. இச்சோதிடக்கலையைத்தான் நம்மவர்கள் வானவியலோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் அதை நிரூபிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நமது அடுத்த தலைமுறைதான் இந்த குறையை தீர்த்து வைக்க வேண்டும். எனது இந்த மனக்குறையை ஆதாரங்களோடு விளக்குகிறேன். சோதிடம் தோன்றிய காலம் எது என்று இன்று வரை யாராலும் அறுதியிட்டு கூற இயலவில்லை. ஆனால் வானவியலில் சந்திரன் புவியை சுற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் எடுத்து கொள்கிறது என்று எப்போது கண்டு பிடித்தார்கள் என்று கூற இயலும்.

இப்போது நாம் இந்த தலைப்பை அலசுவோம்.

வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 பாகை என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 பாகை. இப்படி பட்ட ஒவ்வொரு 30 பாகையையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்

பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன்:
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.

இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்.

இப்போது அறிவியலை பார்க்கலாம். சந்திரன் புவியை சுற்றுவதற்கு 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. எனவே அது ஒரு நாளைக்கு 13.2 பாகை திரும்புகிறது. இது எவ்வாறெனில் ஒரு முழு வட்டத்தின் அளவு 360 பாகை. சந்திரன் ஒரு வட்டப்பாதையில் நம் புவியை சுற்றி வருகிறது. எனவே 360/27.3=13.2 பாகையாம்.

ஆகவே சந்திரன் புவியை சுற்றி வரும் வட்டத்தின் அளவு 360 பாகை மற்றும் அது ஒரு மாதம் என்று சோதிடத்திலும் 27.3 நாள்கள் என்று அறிவியலிலும் கூறுகிறார்கள். இது ஒரு சிறிய அளவு வித்தியாசமே.

ஒரு நுண்நோக்கியும் இல்லாமல் நம்மவர்கள் இந்த அளவு வானவியலை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் வியப்பே மேலிடுகிறது. நம் குழந்தைகளாவது வாய் பிளந்து பார்த்துக்கொண்டிராமல் அதை ஆராய்ச்சி செய்து ஏதேனும் கண்டு பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டுமென என் உளம் நினைக்கிறது.
மேலும் படிக்க......

செவ்வாய், 17 நவம்பர், 2009

உங்களுக்கு ஆண் குழந்தை [Male Child] வேண்டுமா அல்லது பெண் குழந்தை [Female Child] வேண்டுமா? திருமூலரின் திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்!


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இது திருமூலரின் ஒரு அற்புதமான பாடல்.

இந்தப் பாடலிலே ஒரு தம்பதியினர் தமக்கு வேண்டியது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை கணவனே தீர்மானிக்கக் கூடிய ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். நவீன மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிப்பது ஆண்கள். இது ஒரு விஞ்ஞானத் தரவு. இதன் படி ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது. குரோமோஸோம்கள் தாமாகவே நிர்ணயிக்கின்றனவே ஒழிய ஆணின் தன்னிச்சையான முயற்சியால் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப்
பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல்
குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

இதில் நாம் இரண்டு விடயங்களை பார்க்க வேண்டும். ஒன்று குழந்தை உருவாவதற்கு தேவையான விந்து ஆணிடமிருந்துதான் பெண்ணுக்கு கலவியில் மாற்றப்படுகிறது. இரண்டாவது, ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்ற அறிவியல் உண்மை. பெண்களிடம் X குரோமோஸோம் மட்டுமே உள்ளது. எனவே ஆண்களின் மூச்சுக்கும் இந்த குரோமோசோம்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது இல்லையா? யார் சொல்வார்கள்? யோகப்பயிற்சி மூலமாக மூச்சை கட்டுப்படுத்தும் பிராணாயாமமும் நம் தமிழில் உண்டு. இதை துருவி ஆராய்ந்து யாரால் நமக்கு விடை சொல்ல முடியும் நமது அடுத்த தலைமுறையினரை தமிழ் ஆராய்ச்சியில் முடுக்கி விட்டாலொழிய இதற்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை.
மேலும் படிக்க......

திங்கள், 16 நவம்பர், 2009

கிட்டிப்புல்லும் கிரிக்கெட்டும் [Cricket]!


தொலைந்து போன தமிழ் விளையாட்டுக்களில் கிட்டிப்புல்லும் ஒன்று. இது என்னவென்று கேட்பவர்கள் இன்று நிறைய பேர் உண்டு. ஏனெனில் நகர வாழ்க்கையில் இதை நாம் விளையாட முடியாது.

நமது சின்ன வயதில் கிட்டிப்புல் விளையாட்டை நமது தெருக்களில் பார்த்திருக்கலாம். சிறுவர்கள் சேர்ந்து அதை விளையாடுவதை பார்க்கும் பொழுதே நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

கிட்டி, புல், தாண்டு மற்றும் எத்தனை வார்த்தைகள். இதில் நம் இளைய தலைமுறைக்கு எத்தனை தெரியும்

கிட்டிபுல்லை கிரிக்கெட்டின் அடிப்படை என்று கூறுவர். ஆனால் இன்று கிட்டிப்புல் நம் புழக்கத்தில் இல்லை.

இந்த விளையாட்டையும் கிரிக்கெட் போல் பிரபலமாக்க கூடாதா? ஏன் இதை நாம் பிரபலமாக்கவில்லையென்றால் நமது மனப்பான்மைதான். வெளியில் இருந்து வருவனவற்றை நாம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமது பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம். இது விளையாட்டிலிருந்து படிப்பு, கலாச்சாரம் வரை தொடர்கிறது.

ஆகையால் நம் குழந்தைகளுக்கு கிட்டிப்புல் பற்றி சொல்லியாவது கொடுங்கள்.

எனது ஏக்கத்தை தீர்த்துக்கொள்வதற்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். நமது கிட்டிப்புல் இந்த அளவுக்கு பிரபலாமாகினால்? நினைத்தாலே இனிக்கிறது.
மேலும் படிக்க......

வெள்ளி, 13 நவம்பர், 2009

மருந்துகளை தேன் கலந்து கொடுப்பதேன்? தேன் தேன் தித்தித்தேன்! Honeyஅந்த காலத்தில் மருந்துகளை, சூரணங்களை தேன் கலந்து நமக்கு பெரியவர்கள் கொடுப்பார்கள்... ஞாபகம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.
மேலும் படிக்க......

புதன், 11 நவம்பர், 2009

நியூட்டனின் 3வது விதி [Newton's 3rd Law] தமிழில்!!!


ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இது மிகவும் பிரசித்தி பெற்ற நியூட்டனின் 3வது விதி.

நமது தமிழில் ஒரு பழமொழி உண்டு. அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் இதன் அர்த்தத்தை தத்துவார்த்தமாக புரிந்து வைத்திருக்கிறோம். தவறில்லை.

ஆனால் நாம் இப்புவியில் பிறந்திருக்கிறோம். நமக்கு நம் முன்னோர்கள் இன்னொன்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை". இதன் பொருள் அனைவருக்கும் தெரியும். ஆகையால் நாம் தத்துவங்களை எவ்வாறு அறிவியல் பூர்வமாக கொண்டு வருவது என்று ஆராய்ந்து தமிழை அறிவியல் தமிழாக மாற்றுவதில் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும், அடுத்த தலைமுறையினரும் யோசித்தால் வேண்டும்.

சிலர் வாதிடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று. பரவாயில்லை. நம் நம்முடைய எண்ணங்களில் நல்லவர்களாக இருக்கிறோம். நமது கடவுளோ அல்லது ஒரு மாயையோ நம்மை நம் எண்ணங்களை வைத்துதான் எடை போடுவார்களே தவிர இவன் பணக்காரன் அல்லது ஏழை என்பதை வைத்து எடை போடமாட்டர்கள். எனவே நாம் நமது தத்துவங்களை ஆராய்ந்து அதை அறிவியல் தளத்தில், உலகில் பதிய வைத்தாலே நம் தமிழ் சுபிட்சமாகும். நாம் சுபிட்சமானால் இவ்வுலகம் நம்மை நோக்கி வரும். இதுதான் அடிப்படை. எனவே பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் தமிழை வளர்ப்பதை குறிகோளாக கொண்டு இயங்கினால் நிச்சயம் நம் அனைவரையும் அனைத்தும் தேடி வரும் என்பது திண்ணம்.
மேலும் படிக்க......

திங்கள், 9 நவம்பர், 2009

செவ்வாய் கிரகத்துக்கும் [Mars - The Red Planet] செவ்வாய் தோசத்துக்கும் சம்பந்தம் உண்டா?செவ்வாய் கிரகம் அயன் III ஆக்ஸ்சைடு [Iron III Oxide or Fe2O3] தாதுக்கள் நிரம்பி இருப்பதால் அதற்கு சிவப்பு நிற கிரகம் [Red Planet] என்றொரு பெயர் உண்டு. நமது சோதிடக்கலையில் செவ்வாய் கிரகத்தை அங்காரகன் என்று அழைப்பர். அங்காரகன் என்றால் செந்தணல் என்று பொருள் வரும். ஏற்கனவே நாம் பல முறை சோதிடத்தில் சொல்லப்படும் விடயங்கள் அறிவியலிலும் சொல்லப்படுவதை கேள்விபட்டிருக்கிறோம்.

நாம் சிறிது உட்சென்று இதை ஆராய்வோம்.

இப்போது அயன் III ஆக்ஸ்சைடு பற்றி சில விடயங்களை பார்ப்போம். இது அயன் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது. இதன் நிறம் சிவப்பு. இது செவ்வாய் கிரகத்தின் தளம் முழுவதும் பரவி இருப்பதால்தான் செவ்வாய் கிரகம் சிவப்பாக தெரிகிறது.

மேலும் அயன் நமது உடலில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அது என்னவென்றால் நமது சிவப்பணுக்களில் இது ஒரு முக்கியமான பொருள். சிவப்பணுக்களின் நன்மை நாம் அனைவருக்கும் தெரியும். இந்த சிவப்பணுக்கள்தான் நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும் ஒரு வாகனம். இரும்பு சத்து நம் உடலில் குறைவாக இருந்தால் அது நமது உடலில் பல பலவீனங்களை ஏற்படுத்தும் என்பதும் நாம் அறிந்ததே.

சோதிடத்தின் படி செவ்வாய் கிரகத்துக்கு அங்காரகன் என்று பெயர் உண்டு. ஏனெனில் செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி முருகக்கடவுள் ஆவார். இவர் தீயில் இருந்து பிறந்ததால் அங்காரகன் [செந்தணல்] என்று குறிப்பிடபடுவார். ஆகையால் செவ்வாயின் நிறம் சிவப்பு.

இப்போது செவ்வாய் தோசத்துக்கு வருவோம். செவ்வாயின் குணநலன்கள் உங்கள் ஜாதகத்தில் அளவுக்கு குறைவாக இருந்தால் உங்கள் ஜாதகம் செவ்வாய் தோசம் இருக்கும் ஜாதகமாக கருதப்படும். செவ்வாய் தோசம் நீங்க வேண்டுமெனில் முருகனை கும்பிட்டு அக்னி தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோசம் தீரும் என்று நம்புகின்றனர்.

நமக்கெல்லாம் ஒரு அறிவியல் உண்மை தெரியும். கிணற்று தண்ணீரிலோ குளத்து தண்ணீரிலோ இரும்பு சத்து மிக அதிகம். எனவேதான் நம்மை அதிகமாக அக்னி தீர்த்தத்தில் குளிக்க சொல்கிறார்களோ?

இந்த ஒரு விடயத்தை மட்டும் வைத்து நாம் செவ்வாய் கிரகத்துக்கும் செவ்வாய் தோசையும் முடிச்சு போட்டு விட முடியாது. ஆனால் எதுவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இதற்கு ஒரே வழி... தமிழை முழு மனதோடு ஆராய்ச்சி செய்யும் மாணவ செல்வங்கள்.

இன்னும் நிறைய கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. ஆனால் நம் தமிழை இன்னும் தீர ஆராய்ந்தால் இதற்கெல்லாம் விடை தெரியலாம். எனவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் பாணியில் வீட்டுக்கு ஒரு பிள்ளை அறிவியல் தமிழில் முனைவர் பட்டம் வாங்க முயற்சிக்கலாம்.
மேலும் படிக்க......

சனி, 7 நவம்பர், 2009

மாயையும் பிளாக் ஹோலும் [Black Hole] ஒன்றா?


சைவ சித்தாந்தத்தின் படி இப்பூவுலகம் ஒரு காரியப்பொருள். ஒவ்வொரு காரியப்பொருளுக்கும் ஒரு மூலப்பொருள் உண்டு. அப்படியானால் இவ்வுலகின் மூலப்பொருள் என்ன?

அதுதான் மாயை. மாயை என்றால் அது கண்ணுக்கு புலப்படாத அருவப்பொருள் ஆகும். இந்த மாயை எங்கும் நிறைந்திருக்கும். இதுதான் சைவ சித்தாந்தம்.

நாம் இப்போது இதை இது வரையில் அறிவியல் துறையில் கண்டு பிடித்திருக்கும் விடயங்களை வைத்து பார்ப்போம்.

அறிவியலின் படி நமது பூமி அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது. இதனுள்ளே நாம் எதனையும் காண முடியாது. கிட்டத்தட்ட அது ஒரு அருவம் தான்.

எனவே அறிவியல் நமது சைவ சித்தாந்தம் நோக்கி போகிறது என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். நாம் நம் குழந்தைகளை தமிழை மேலும் ஆராய சொன்னால் இன்னும் கூட நமக்கு மற்றவர்களுக்கு முந்தி பொருள் விளங்கலாம். ஏனெனில் நாம் நம் முன்னோர்கள் வழி வந்தவர்கள்தாமே.
மேலும் படிக்க......

வெள்ளி, 6 நவம்பர், 2009

சூடம் [Camphor] சுத்துறது எதுக்கு? சூட்சும சரீரம் [Epidermis] தெரியுமா?


நம் சிறு வயதில் இரவு படுக்கும்போது பெரியவர்கள் சிறுவ சிறுமியர்களுக்கு சூடத்தை வைத்து சுற்றி வெளியில் கொண்டு போய் எரிய வைத்து விடுவார்கள். இதிலும் ஒரு அறிவியல் உண்டு. அது என்ன தெரியுமா?


நம் உடல் இரு வகையான சரீரங்களை உடையது. ஒன்று ஸ்தூல சரீரம் [Dermis], மற்றொன்று சூட்சும சரீரம் [Epidermis]. இதில் ஸ்தூல சரீரம் சற்று தடிமனானது, சூட்சும சரீரம் மிக நுண்ணியது. கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாது. இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் கிருமிகள் மிக எளிதில் உள்ளே சென்று தங்கிவிடும். சூடம் இவைகளை உறிஞ்சி எடுத்து விடும் தன்மை உடையது.

நாம் நாள் முழுவதும் வெளியில் சுற்றி விட்டு வருவதால் நம் சூட்சும சரீரத்தில் நிறைய கிருமிகள் தங்கி இருக்க வாய்ப்புண்டு. ஆகையால்தான் நம் பெரியவர்கள் நம் உடம்பை சூடத்தால் சுற்றி தினசரி போடுவார்கள்.
மேலும் படிக்க......

புதன், 4 நவம்பர், 2009

மந்திரம் [Mantra] அறிவியலா?

மந்திரம்... அறிவியலை பொறுத்த வரை கெட்ட வார்த்தை. ஆன்மீகவாதிகளுக்கு உயிர். இங்கு நாம் மந்திரத்தை ஆன்மீகமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அலசுவோமே. ஏதாவது ஒத்துப்போகிறதா என்றுதான் பார்ப்போமே.

"ஓம்", இதுதான் அனைத்து இந்து கடவுள்களுக்கும் நாம் உபயோகப்படுத்தும் பிரணவ மந்திரம். ஆன்மீகவாதிகளின் கூற்றை பார்ப்போமே. இந்த மந்திரத்தை "அ", "வு" மற்றும் "ம" என்பதின் கூட்டுச்சொல்லே ஓம் எனும் மந்திரம். இந்த பிரித்தெழுதுதல் முறையில் இதை அம் என்றும் கூறலாம். இந்த வார்த்தை கிட்டத்தட்ட இந்த உலகில் அனைவரும் ஒரு முறையேனும் சொல்லி இருப்பார். எனவே இந்த மந்திரமே உயர்ந்தது என்று கூறுவர். இதை சொன்னால் நம் பிரச்சினைகள் அனைத்தும் உடனே விலகும் என்றும் கூறுவர்.

ஆனால் நம் இன்றைய அறிவியலுக்கு அறிவு பூர்வமான விளக்கங்கள் தேவை. அதை இந்த மந்திரத்தால் கூற முடியுமா? ஆன்மீகவாதிகளும் நம் பெற்றோர்களும் அதை நாம் யாருக்கும் விளக்கத்தேவையில்லை என்று கருத்து கூறுவர். மிகத்தவறு என்றுதான் நான் சொல்வேன். நம் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் தேவை. இல்லையெனில் அவர்கள் இதை தூக்கி எரிந்து விட்டு சென்று விடுவர். அதன் பிறகு கலி முத்தி போச்சு என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு ஆதாரபூர்வமான உண்மைகள் தேவை. ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

[1] ஓம். உலகில் தெரிந்தோ தெரியாமலோ அதிகப்படியாக உச்சரிக்கும் ஒரு வார்த்தை. எடுத்துக்காட்டாக பசு கூட அம்மா என்று கத்தும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் [தமிழராக இல்லாவிட்டாலும் கூட] ம்மா என்று சொல்லாமல் இருக்காது. எனவே தெரிந்தோ தெரியாமலோ இவ்வார்த்தை அனைவராலும் சொல்லப்படுகிறது.

[2] இயற்பியல் விதிப்படி ஒன்றும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு இயக்கம் வேண்டுமெனில் அதற்க்கு ஒரு சக்தி தேவை. எடுத்துக்காட்டாக ஒரு இயந்திரம் இயங்க வேண்டுமெனில் அதற்கு மின்சாரம் எனும் சக்தி தேவை. மின்சாரம் நீரிலிருந்து எடுக்கலாம், நிலக்கரியிலிருந்து எடுக்கலாம். ஆனால் அதை ஒரு நிமிடத்தில் செய்து விட முடியுமா? நீரிலிருந்து மின்சாரம் எடுக்க வேண்டுமானால் அதில் ஒரு காற்றாலையை குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற விட்டோம் என்றால் மின்சாரம் எடுக்கலாம். ஆகவே ஒன்றும் இல்லாத இடத்தில் ஒரு இயக்கத்தை உண்டாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சக்தி தேவை. அச்சக்தியை உருவாக்க தொடர் இயக்கங்கள் தேவை.

[3] இப்போது மேற்கூறிய 2ல் இருந்து நாம் சில விடயங்களை அறிய முற்படலாம். வெற்றிடத்தை நாம் நம் மனமாக, வாழ்வாக எடுத்துகொள்ளலாம். நம் வாழ்வில் இயக்கங்கள் அல்லது வெற்றிகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது நமக்கு சக்தி தேவை. இங்கு மின்சாரத்தை சக்தியாக உருவகித்து கொள்ளலாம். சக்தி வேண்டுமெனில் நமக்கு ஒரு காற்றாலை போன்ற ஒரு இயந்திரம் தேவை. இங்கு இயந்திரத்தை மந்திரமாக கொள்ளலாம். நமக்கு சக்தி வேண்டுமெனில் இயந்திரத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போதுதான் சக்தி உருவாகும். எனவே நாம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை பல பேர் பல முறை சொல்லி அதற்கு ஒரு சக்தியை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். இதில் ஓமெனும் மந்திரத்தை இந்த உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக கூறி வருகின்றன. எனவே இந்த மந்திரத்தில் சக்தி அதிகமாக கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இறுதியாக:

இந்த மந்திரம் ஓம் என்று கூட இருக்க தேவையில்லை. அந்த மந்திரம் "நான் இன்று பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்" என்பதுவாக கூட இருக்கலாம். இந்த மந்திரத்தை எவ்வளவு முறை கூறுகிறோமோ அந்த அளவுக்கு சக்தி உருவாகும் அந்த வாக்கியத்துக்கு.

அப்துல் கலாம் மற்றும் நம் முன்னோர்கள் கூறிய "கனவு காணுங்கள்" என்ற வார்த்தைகள் கூட மந்திரங்களே. ஏனெனில் கனவு எப்போது நம் லட்சியமாக மாறும் தெரியுமா? நம்மால் அதை சாதிக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில். எப்போது அதை சாதிக்க முடியும்? அதை பற்றி அடிக்கடி நினைத்துக்கொண்டே இருக்கும்போது. அப்போதுதான் அந்த எண்ணங்களுக்கு ஒரு சக்தி கிடைக்கும், வழிகளும் தோன்றும்.

எனவே நாமும் மந்திரங்களை உருவாக்க முடியும். அது இறை மந்திரங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மேலும் படிக்க......

செவ்வாய், 3 நவம்பர், 2009

கோவில் கொடிமரம் [Temple Flagstaff] ஒரு அலைக்கம்பமா [Antenna]?


நமது பண்டைய காலத்து கோவில்களில் கர்ப்பகிரகத்தின் நேர் எதிரில் ஒரு கொடிமரம் அமைத்து இருப்பார்கள். கோவில் ஆகம விதிமுறைப்படி இது சரியான ஒன்று. இவை தாமிர [Copper] உலோகத்தால் ஆனவை. நம் மக்கள் அனைவரும் அதை சுற்றி விழுந்து கும்பிடுவார்கள். இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்கிறீர்களா?

அறிவியலின் படி தாமிரம் [Copper] ஒரு கடத்தி [Conductor] மற்றும் ஈர்க்கும் சக்தி [Receiver] கொண்ட ஒரு உலோகம். அது மின் காந்த அலைகளையோ [Electro Magnetic Waves] அல்லது அகிலக்கதிர்களையோ [Cosmic Rays] விண்மீன்திரளிலிருந்து [Galaxy] ஈர்த்து தன்னை சுற்றி அதை வெளியிடுகிறது [Emitting]. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

அதனால்தான் நம்மவர்கள் கொடிமரத்தை சுற்றி விழுந்து வணங்குகிறார்கள். அப்படியானால் நம் முன்னோர்களுக்கு இது தெரிந்திருக்கிறதா? இப்படி துல்லியமாக தெரிந்திருக்காவிட்டாலும் கட்டாயம் தாமிரம் இந்த மாதிரியான நல்ல அலைகளை வான வெளியில் இருந்து ஈர்த்து நமக்கு அளிக்கிறது என்று தெரிந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.மேலும் படிக்க......