புதன், 18 நவம்பர், 2009
சோதிடக்கலையும் [Jothidam] வானவியலும் [Astronomy] ஒன்றா? II
நமது அடுத்த தலைமுறைதான் இந்த குறையை தீர்த்து வைக்க வேண்டும். எனது இந்த மனக்குறையை ஆதாரங்களோடு விளக்குகிறேன். சோதிடம் தோன்றிய காலம் எது என்று இன்று வரை யாராலும் அறுதியிட்டு கூற இயலவில்லை. ஆனால் வானவியலில் சந்திரன் புவியை சுற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் எடுத்து கொள்கிறது என்று எப்போது கண்டு பிடித்தார்கள் என்று கூற இயலும்.
இப்போது நாம் இந்த தலைப்பை அலசுவோம்.
வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 பாகை என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 பாகை. இப்படி பட்ட ஒவ்வொரு 30 பாகையையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்
பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது.
சந்திரன்:
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.
இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்.
இப்போது அறிவியலை பார்க்கலாம். சந்திரன் புவியை சுற்றுவதற்கு 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. எனவே அது ஒரு நாளைக்கு 13.2 பாகை திரும்புகிறது. இது எவ்வாறெனில் ஒரு முழு வட்டத்தின் அளவு 360 பாகை. சந்திரன் ஒரு வட்டப்பாதையில் நம் புவியை சுற்றி வருகிறது. எனவே 360/27.3=13.2 பாகையாம்.
ஆகவே சந்திரன் புவியை சுற்றி வரும் வட்டத்தின் அளவு 360 பாகை மற்றும் அது ஒரு மாதம் என்று சோதிடத்திலும் 27.3 நாள்கள் என்று அறிவியலிலும் கூறுகிறார்கள். இது ஒரு சிறிய அளவு வித்தியாசமே.
ஒரு நுண்நோக்கியும் இல்லாமல் நம்மவர்கள் இந்த அளவு வானவியலை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் வியப்பே மேலிடுகிறது. நம் குழந்தைகளாவது வாய் பிளந்து பார்த்துக்கொண்டிராமல் அதை ஆராய்ச்சி செய்து ஏதேனும் கண்டு பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டுமென என் உளம் நினைக்கிறது. மேலும் படிக்க......
திங்கள், 5 அக்டோபர், 2009
சோதிடக்கலையும் வானவியலும் ஒன்றா?
தமிழில் சோதிடக்கலை என்று ஒன்று உண்டு. இன்று அதை நம்புவோர் ஒரு கூட்டமும் அதை மூட நம்பிக்கை எனப்படுவோர் ஒரு கூட்டமுமாக பிரிந்துள்ளனர். சோதிடர்களும் அதை ஒரு தொழிலாக செய்கின்றனரே தவிர்த்து அதை ஒரு பாடமாக படித்து செய்ய மறுக்கின்றனர். ஏனெனில் பாடமாக படித்து அதை செய்வதென்றால் செலவும் ஆகும், வருமானம் செய்யும் காலமும் குறையும். ஆனால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்திருந்த வானவியல் பாடங்களை. நான் கூறுவதற்கு சில ஆதாரங்களை கூறுகிறேன்.
சோதிடத்தில் 12 கட்டங்கள் உண்டு. சனி என்றொரு கிரகமும் உண்டு. அனைத்து கட்டங்களுக்கு நடுவில் சூரியனும் உண்டு. நம் சோதிடக்கலையில் ஒரு கணக்கு உண்டு. அது என்னவென்றால், சனி கிரகமானது ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்கு போவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். இப்படியாக சனி கிரகம் 12 கட்டங்களையும் சுற்றி முடிக்க 30௦ வருடங்கள் ஆகின்றன.
நமது இன்றைய அறிவியலில் சனி கிரகமானது சூரியனை சுற்றி வர 30௦ வருடங்கள் ஆகின்றன என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.
எனது கேள்வி என்னவென்றால் நாம் எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்வது இன்று ஒரு பெருமை ஆகி விட்டது. ஆனால் நாம் நம் அடிப்படை வானவியலை இழந்து கொண்டிருக்கிறோம். என்னால் இந்த ஒரு உதாரணத்தை தவிர வேறு பல உதாரணங்களும் தர முடியும். ஒன்று, செவ்வாய் [Mars] கிரகத்தின் நிறம் சிவப்பு. இது சோதிடத்திலும் அறிவியலிலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை.
நாம் நம் குழந்தைகளுக்கு வானவியலை சொல்லித்தர வேண்டாமா? நம் குழந்தைகளை நாம் சோதிடத்தில் முனைவர் பட்டம் [Ph.D] வாங்க நாம் தூண்டலாம். சிந்தியுங்கள், செயல் படுங்கள். நம் தமிழ் நம்மை கண்டிப்பாக வாழ வைக்கும், நம் குழந்தைகளையும்தான்...
மேலும் படிக்க......
