சனி, 31 அக்டோபர், 2009
மனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்!
இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது.
நம் திருமூலர் திருமந்திரம் வாயிலாக உரைப்பது என்ன?
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
என்று பாடி மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த மாமேதை திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.
இந்த கட்டுரையை அறிவியல் தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அறிவை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன். மேலும் படிக்க......
வெள்ளி, 30 அக்டோபர், 2009
பகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா? சர்.சி.வி.ராமனின் ஒளியின் மூலக்கூறு சிதறல் [Sir.C.V.Raman's Molecular Scattering of Light]
பகல் வானம் ஏன் நீலமாக உள்ளது? இது அனைவரும் தினசரி பார்க்கும் ஒன்றுதான். ஆனால் எத்தனை பேருக்கு அதை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. பார்த்தார் ஒருவர். அவர்தான் சர்.சி.வி.ராமன் என்னும் தமிழர். அதன் காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார். அதுதான் ஒளியின் மூலக்கூறு சிதறல்.
1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு 1930ம் வருடம் பெறுவதற்கு ஏதுவாயிற்று!
திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது.
சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நாம் படிக்கும் இடம் முக்கியமல்ல என்றும் நமது பகுத்தறியும் திறன்தான் மிக முக்கியம் என்பதே.
மேலும் படிக்க......
புதன், 28 அக்டோபர், 2009
எலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்தியம் 1000!
எலும்புருக்கி நோய் மைகோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. இதை தீர்க்க 6 முதல் 24 மாதங்கள் வரை அலோபதியில் தேவைபடுகிறது. ஆனால் நம் மருத்துவ தமிழ் நூலான தேரையர் வைத்தியம் மிகச்சிறப்பான வழிமுறைகளை பாடலாக கூறுகிறது.
மெய்யடா நெரிஞ்சி பிரமி யிலை
வையடா யோர் வகைக்குப் பலமரை
ஐயடா நிம்பழம் போல் திரட்டியே
செய்யடா கற்கண்டு சீனி கூட்டிடே.
கூட்டிடு விள நீரிற் குழப்பியே
மீட்டிடு மிள நீரு மிலாவிட்டால்
ஊட்டிடும் பசும் பாலுற வாகவே
கேட்டிடு மெலும் புருக்கிபோங் கார்த்திடே
உபயோகிக்கும் முறை:
நெருஞ்சில், பிரமி இலை, வகைக்கு அரைப்பலம் அரைத்து வேப்பம்பழம் போல் திரட்டி கற்கண்டு சீனி கூட்டி இளநீரில் குழப்பி உட்கொள். இளநீர் கிடைக்கா விட்டால் பசும்பாலில் குழப்பி உட்கொள், எலும்புருக்கி நோய் தீரும்.
நாம் சிந்திக்க வேண்டியது:
எலும்புருக்கி நோய்க்கு நம் தமிழில் மருந்து இருக்கிறது. அப்படியானால் நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் நம் குழந்தைகளை நம் முன்னோர்கள் வழியில் கொண்டு செல்வோமாக.
மேலும் படிக்க......
செவ்வாய், 27 அக்டோபர், 2009
தலைக்குத்துக்கு [Headache] மருந்து
மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.
சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.
தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க......
திங்கள், 26 அக்டோபர், 2009
உயிரியற் கொள்கை [Senses]
உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.
“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்;
ஈரறிவாவது, உற்றுணர்தல், நாவினால் சுவையறிதல்;
மூவறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்;
நாலறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல் கண்ணினால் கண்டறிதல்;
ஐயறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;
ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தியுள்ளனர்',
என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.
ஆக தொல்காபியம் ஏற்கனவே ஆறாவது அறிவைப்பற்றி சொல்லி இருக்கிறது என்று தெரிகிறது. அது சரி பகுத்தறியும் திறன் இருந்ததால்தானே இதை பற்றி ஒரு முன்னோடியாக சொல்ல முடிகிறது. நமக்குத்தான்..???
மேலும் படிக்க......
குரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்கியத்தில்!
சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை முழவு, தாளம், கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.
திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து
என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன் மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.
பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க......
வெள்ளி, 23 அக்டோபர், 2009
விரதத்தின் [Fasting] மகிமை!
இன்று கந்தர் ஷஸ்டி விரதம் முடிவுக்கு வரும் நாள். சூரசம்ஹாரம்.. அதாவது சூரபன்மாவை அழிக்கும் நாள். பக்தர்கள் தமது ஒரு வார விரதத்தை கை விடும் நாள்.
அட என்ன விந்தை! இந்த "என் தமிழ்" இடுகையில் அறிவியல் தமிழ் மட்டும்தான் பேசப்படும் என்று நினைந்தோம். ஆனால் இறை முறைகளை பற்றியும் பேசப்படுகிறதே என்கிறீர்களா?
விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா?
மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா?
அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா? இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/view/generic/id/40242/title/Possible_anticancer_power_in_fasting_every_other_day. ஏன்? இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.
எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.
மேலும் படிக்க......
