செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குழந்தைகளும், நம் தமிழ் புலமையும்! [Tamil Efficiency]


குழந்தைகள்... நாம் அவர்களுக்கு இந்த உலகத்தை பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நாம்தான் அவர்களுக்கு நமது தாய் மொழியிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமாம். அப்போது நமக்கு தெரிந்ததைதானே சொல்லிக்கொடுக்கமுடியும். நமக்கு தெரியுமா? ம்ம்ம்... அதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒன்று... தயவு செய்து நமக்கு மற்றவர்களை விட அதிகம் தெரியும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதிலும் தத்தம் குழந்தைகளை விட... நான் என் குழந்தையிடம் தமிழில் தோற்றுப்போன ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.

நிகழ்வு 1:

இடம்: சாமி அறை
நிகழ்வு: சாமி கும்பிட சொல்லிக்கொடுத்தல் [இங்கேதானே சிக்கினேன்...]
பாத்திரங்கள்: நானும் எனது 1 வயது குழந்தை சிவாத்மிகாவும் [செய்கையும் சில வார்த்தைகளும் மட்டுமே பேசுவார்கள்]

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: எனது [அதாங்க என்னோட] கன்னத்தில் [சப்பென்று] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனேன். ஏன் அவர் தப்பாக புரிந்து கொண்டார் என்று. எனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் கூறிய பதில் சிந்திக்கும்படி இருந்தது. மீண்டும் சிவாத்மிகாவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுக்க முனைந்தேன்.

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து உன்னுடைய கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: மிக அழகாக அவரது கன்னத்தில் [மெத்துக்கையால்] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது... மேலும் இதிலிருந்து நான் சில விடயங்களை கற்றுக்கொண்டேன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. நமக்கு தமிழ் தெரியும். ஆனால் தெரியாது.
2. நமக்கு தமிழ் தெரியாதபோது அதை அடுத்தவர்களுக்கு அரைகுறையாக சொல்லி கொடுக்ககூடாது.
3. நாம் தமிழை படித்து விட்டுத்தான் நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

நண்பர்களே மேலும்,

1. குழந்தைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
2. அவர்களுக்கு நம்மை விட அதிகம் புரிந்து கொள்ளக்கூடிய திறன் உண்டு.
3. நீங்கள் அவர்களுக்கு கட்டம் கட்டாதீர்கள். நீங்கள் அவர்களுக்குண்டான தேவைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றபடி அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் நமக்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தெரியாது.

இன்னும் சிலர் கூறுவது என் காதில் விழுகிறது.

1. அதற்காக குழந்தைகளை அப்படியே விட்டு விட முடியுமா என்று. எப்படிப்பட்ட கனவுகள் வைத்திருக்கிறேன் என்று.

நான் உங்களை விட்டுவிடச்சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதற்கு சரியான வழிகாட்டியா என்பதை மட்டும் தீர்மானித்து கொள்ளுங்கள். நீங்கள் கூறியபடி உங்கள் குழந்தை உங்கள் கனவை அதன் கனவாக சுமந்து நனவாக்க விளைய வேண்டுமானால் உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

நான் ஆரம்பித்து விட்டேன். நீங்களும் ஆரம்பித்தால் நலமே!
மேலும் படிக்க......