ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body]!


அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டம் முழுவதும் பரவியிருப்பவளை அளப்பது அரிது,
பிண்டத்தினுள்ளே வியாபித்திருப்பவள்,
குண்டம் வைத்து மந்திரம், குணம் இவை யாவற்றிலும் தேடிப்பார்த்தும்
நம் பிண்டத்திலுள்ளவலை அறியாதவர்கள் வேறெங்கிலும் அவளை அறியார்கள்.

அதாவது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவோர்கள் கடவுளை காணமாட்டார்கள் என்பதே இதன் நேரிடையான அர்த்தம்.

இதை நாம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வோம். விடை யாதெனில்,

1) அண்டமும் பிண்டமும் ஒன்று.
2) அண்டத்தை அறிவதற்காக கோடானு கோடி டாலர்கள், ஐரோக்கள், ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஆனால் நாம் தேடுவதை விடுத்து வேறு ஏதாவது தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்து நாம் ஆனந்த கூத்தாடுகிறோம்.
3) பிண்டம் அண்டத்தின் சிறு வடிவே. நாம் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆய்வு செய்யவேண்டும். அது தெரிந்து விட்டால் நம்மால் அண்டத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளளலாம்.

இதற்கு நம் அடுத்த தமிழ் தலைமுறைதான் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் அறிவியல் தமிழின் அவசியத்தை உணர்த்தினாலே போதுமானது.

இது எனது கருத்து மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் பதிவு செய்யுங்கள்.

9 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே

தேவன் சொன்னது…

/// ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே ///

பாடலை மட்டும் சொல்லிடுப்போனா பொருள் யார் சொல்வது ஐயா !


சக்திக்குமரன் ஐயா நீங்களும் பாடலுக்கு விளக்கம் முழுசா சொல்லலையே.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

இதுவும் திருமூலரின் திருமந்திரப்பாடலே.

இதன் அர்த்தம் யாதெனில்,

பிண்டம் - உடம்பு. பிழக்கடை - பின்பக்கம். வாசல் - குதம். உடம்பின் பின்பக்கமான மூலாதாரத்திலுள்ள காற்றைத்தலையின் மேலே செலுத்தும் தியானப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் [அடுத்தடுத்து ஏகில்], வண்டு இச்சிக்கும் மலர்க்குழல் மாதரார் - வண்டுகள் தேனுண்ண விரும்பி வரும் மலர்கள் சூடிய கூந்தலுடைய பெண்கள் கண்டு ஆசைப்படும் அழகிய உடம்பைப்பெறலாம்.

அண்டம் - உச்சந்த்தலை, சகஸ்ரதளம். இச்சிக்கும் - விரும்பும். குழல் - கூந்தல். காயம் - உடம்பு.

அண்டத்தை ஆராய்வதற்கு முன்னால் பிண்டத்தை ஆராய்வது சிறந்தது என்று எனது கட்டுரையில் சொன்னதால் பிண்டத்தின் மேன்மையை உணர்த்தும் இந்த பாடலை சுவாமி ஓம்கார் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு சக்திகுமரன்,
திருமூலர் அப்படி விளக்கம் கூறினாரா என தெரியவில்லை.. மேலோட்டமாக பார்த்தால் அப்படி தெரியலாம்.

உங்கள் கட்டுரை சார்ந்த திருமந்திம் என்பதாலேயே இங்கே அதை கூறினேன்.


பிண்டம் என்பது நம் உடம்பு.

அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புறவாசலாக நம் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது. நம் பிண்டத்தை மீண்டும் மீண்டும் ஆய்ந்தால் - அதில் தியானித்தால்...

வண்டு எப்படி பூவின் தேனை (குழல்) சுவைக்குமோ அப்படி இந்த காயம் என்ற சிறிய விஷயத்தால் பிரபஞ்சத்தின் தேனை ருசிக்க முடியும்.

காயமே அத்தேனை கண்டு சொல்லும் விஷயமாக இருக்கும்.


பிண்டத்தில் ஆராய்ந்தால் அண்டத்தின் விஷயங்கள் தெரியவரும். இது ஒரு குறுக்குவழி..

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு சுவாமி ஓம்கார் அவர்களுக்கு,

தாங்கள் எழுதிய விளக்கம் மிக்க நன்றாக இருந்தது. நன்றி.

நான் எழுதிய விளக்கம் "திருமூலர் - திருமந்திரம், மூலமும் - விளக்க உரையும்" என்ற புத்தகத்தை ஆதாரமாகக்கொண்டது. இதன் விளக்க உரை திரு.ஞா. மாணிக்கவாசகன் என்பவராவார்.

எனக்கு உங்கள் விளக்கத்தில் ஒரு இடத்துக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது. அவை யாதெனில்,

1) //அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புறவாசலாக நம் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது.//

எப்படி இதை கூறுகிறீர்கள்? இதற்கு எதுவும் விளக்கம் இருக்கிறதா?

மீண்டும் நன்றி.
சக்திக்குமரன் விஜயராகவன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு சக்திகுமரன்,

//நான் எழுதிய விளக்கம் "திருமூலர் - திருமந்திரம், மூலமும் - விளக்க உரையும்" என்ற புத்தகத்தை ஆதாரமாகக்கொண்டது. இதன் விளக்க உரை திரு.ஞா. மாணிக்கவாசகன் என்பவராவார்.//

சிவப்பு நிறத்திலான புத்தகம் அல்லவா? அனைத்து திருமந்திர தந்திரங்கள் விளக்கத்துடன் அடங்கிய நல்ல புத்தகம். ஆனால் அது மிகவும் அடிப்படை புரிதலுக்காக எழுதபட்டது.

திருமந்திரத்தின் ஒவ்வொரு பாடலும் மேட்ரிக்ஸ் போல பல்முனைப்பு கொண்டது.

திருமந்திரங்களை உங்கள் முன் சுழல விட்டால் அவனை சூரிய ஒளியில் சுழலவிட்ட கண்ணாடி முத்துபோல உங்களுள் எத்தனையோ விஷயங்களை சுழல விடும். (உதாரண உபயம் திருமூலரே..!)

//1) //அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புறவாசலாக நம் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது.//

எப்படி இதை கூறுகிறீர்கள்? இதற்கு எதுவும் விளக்கம் இருக்கிறதா?//

அண்டத்தை தற்கால விஞ்ஞானம் ஆய்வதை போல செய்வது நேர்வழி. அதாவது உணர்வு நிலையில் இயந்திர உதவியால் அடைவது.

தந்த்ரா என்றால் மிகவும் எளிய குறுக்குவழி. பிண்டத்திலிருந்து அண்டத்தை உணர்வது எந்த செலவும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் செய்யக்கூடியது. இதனால் சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விரைவாகவும் எளிமையாகவும் அடையும் வழியை அவ்வாறு குறிப்பிடுகிறார் திருமூலர்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

மேலும் “பிழக்கடை வாசலை” என குறிப்பிடுவது உள்நோக்கி செல்லுவதை காட்டுகிறது.

வீட்டில் முன்வாசல் ‘புற’வாசல் என அழைப்பார்கள். அதில் வெளியே செல்லுவதற்காக அதிகம் பயன்படும். பின்கட்டு வாசல் வீட்டின் உள்ளே செல்லுவதற்காகமட்டுமே பெரும்பாலும் பயன்படும்.

பாருங்கள் திருமூலர் 4 வரி எழுதினார் நாம் இதற்கு நாலாயிரம் பக்கம் எழுதினாலும் தீராது. அதனால்தான் திருமூலரை நான் ரகசிய எதிரியாக ரசிக்கிறேன்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

அபாரமான மேல்விளக்கம் [Interpretation] சுவாமி ஓம்கார் அவர்களே. மிக்க நன்றி தங்கள் பதில்களுக்கு. இன்று ஒரு நல்ல விளக்க அறிந்து கொண்டேன்.

MS சொன்னது…

thirumanthirathin vilaaka urai, thiyanam,pranayama, patriyavatrai therinthu kolla aasai padukiraen uthava vendum.

கருத்துரையிடுக