வெள்ளி, 13 நவம்பர், 2009

மருந்துகளை தேன் கலந்து கொடுப்பதேன்? தேன் தேன் தித்தித்தேன்! Honey



அந்த காலத்தில் மருந்துகளை, சூரணங்களை தேன் கலந்து நமக்கு பெரியவர்கள் கொடுப்பார்கள்... ஞாபகம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக