வெள்ளி, 16 அக்டோபர், 2009

தள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத்துவ பங்களிப்பு!

இன்று நம் இளைஞ, இளைஞிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை மலட்டுத்தன்மை. எத்தனை எத்தனை மருத்துவமனைகள். எவ்வளவு செலவுகள். ஆனால் நாமே நம் உடலை அதற்கு முன்னால் பரிட்சித்துக்கொள்ளலாம். சித்தர் தமிழ் அல்லது மருத்துவ தமிழ் என்றொரு மகா காவிய வகைகள் தமிழில் உள்ளது. இதை யாரும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் இன்றளவும் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் சிலர் கடை பிடிக்கின்றனர். அத்தகைய மருத்துவ தமிழ் நூல்களில் ஒன்றுதான் பதார்த்த குணம். இப்போது மலை வேப்பமர வேர்ப்பட்டை [Botanical Name: Azadirachta indica] என்ற மூலிகையின் குணத்தை பற்றி பதார்த்த குணத்தில் கூறியிருப்பதை பார்ப்போம்.

பாடல் - மலை வேப்பமர வேர்ப் பட்டை
---------------------------------------------------------------------
மலட்டுப் புழுவும் வயிற்றின் வலியு
மலட்டுவாய் வும்போ மடங்கிக் கொலட்டு
முலைவேஞ் சினவேற்கண் ணோதிமமே கேளாய்
மலைவேம்பின் பேரை வழுத்து.

மருந்தின் குணம்
-------------------------------
மலை வேப்பமரத்திற்கு
மலட்டுக்கிருமி
ரத்தகுன்ம ரோகம்
ஓடிஓடிக் குதிக்கின்ற வாதம் ஆகியன விலகும்.

உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
------------------------------------------------------------------------------------------------
வேப்பமர வேர்ப்பட்டை பச்சை 1 பலம் கொண்டுவந்து பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் போட்டு முக்கால் படி சலம்விட்டு ஒரு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரைப் பாலடை வீதம் 3 மணி நேரத்திற்கு ஒருமுறையாகக் கொடுத்துவந்து மறுநாள் காலையில் சிற்றாமணக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து ஏதாவது கொடுக்கக் கிருமிகள் வெளியாகும்.

வேப்ப இலையையும் பூவையும் அரைத்துத் தலைவலிக்கு பூசக் குணமாகும். அரை பலம் பட்டைக்கு கால் படி சலம்விட்டு 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 11/2 அவுன்ஸ் அளவு தினம் 2 வேளை கொடுத்துவரத் தோல் சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இன்னும் இதனால் கண்டமாலை, குட்டம் முதலியன போம். மலட்டுப் பூச்சி என்னும் கிருமிகளால் கருப்பம் தடைப்பட்ட ஸ்திரீகளுக்கு மாதவிலக்குக் காலத்தில் ஸ்நானம் செய்த 3வது நாள் வேப்ப இலைச்சாற்றை காலையில் ஒருவேளை ஒரு தேக்கரண்டியளவு பாலுடன் கலக்கிக்கொடுக்கக் கிருமிகள் விலகிக் கருப்பம் உண்டாகும். சிலருக்கு வாந்தியும் பேதியும் ஆவதுமுண்டு.

நான் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவனும் அல்ல, அனுபவப்பட்ட வைத்தியனும் அல்ல. எனினும் வேப்ப மாற வேர்ப்பட்டை என்பது நம் உடலுக்கு ஒவ்வாத பொருளும் அல்ல. எனவே நாம் நம் பணத்தை மூட்டை மூடையாக கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டுவதற்கு முன்னால் இதை முயற்சி செய்து பார்க்கலாமே.

மேலும் என் தமிழ் இடுகையின் நோக்கமே நம் குழந்தைகளுக்கு தமிழை அறிவியல் தமிழாக பார்க்க வைக்க வேண்டும் என்பதே. நம் குழந்தைகளுக்கு நாம் இந்த மருத்துவ தமிழ் நூல்களை வாங்கி படிக்க வைத்தல் வேண்டும். அதுவே நம் குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக