வெள்ளி, 30 அக்டோபர், 2009

பகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா? சர்.சி.வி.ராமனின் ஒளியின் மூலக்கூறு சிதறல் [Sir.C.V.Raman's Molecular Scattering of Light]

பகல் வானம் ஏன் நீலமாக உள்ளது? இது அனைவரும் தினசரி பார்க்கும் ஒன்றுதான். ஆனால் எத்தனை பேருக்கு அதை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. பார்த்தார் ஒருவர். அவர்தான் சர்.சி.வி.ராமன் என்னும் தமிழர். அதன் காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார். அதுதான் ஒளியின் மூலக்கூறு சிதறல்.

1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு 1930ம் வருடம் பெறுவதற்கு ஏதுவாயிற்று!

திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது.

சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நாம் படிக்கும் இடம் முக்கியமல்ல என்றும் நமது பகுத்தறியும் திறன்தான் மிக முக்கியம் என்பதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக